×

நிதி, கல்வி உரிமைகள் பறிப்பு, பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை தமிழ்நாட்டை பல வகையில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி சாடல்

தஞ்சை: நிதி, கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டை பல வகையிலும் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தஞ்சையில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சகோதரர் எஸ்.எஸ்.ராஜகுமாரன்-சர்மிளா ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா-டாக்டர் வெங்கடேஷ் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்து பேசியதாவது:

இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே வளரும் மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக திகழ்கிறது. இதையெல்லாம் பொறுக்க முடியாத ஒன்றிய பாசிச பாஜ அரசு இன்றைக்குப் பல்வேறு வகையில நம்முடைய தமிழ்நாட்டுக்கு, நம்முடைய அரசுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. நிதி உரிமையை பறிக்கிறார்கள். மொழி உரிமையை பறிக்கிறார்கள். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்பு அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்கன்னு பெருமையாக சொல்லிக்கொள்வார். இப்படி ஒன்றிய அரசு தமிழ்நாட்டை பல வகையில் வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்கட்சித் தலைவர் இருக்கிறார்.

அவர் எடப்பாடி பழனிசாமி. நிதி அமைச்சர் பட்ஜெட்டைப் படித்து முடிக்கும் முன்பே ‘மிகச் சிறந்த பட்ஜெட்’ என்று சொல்கிறார். முரட்டு பக்தர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா. பாஜவுடைய முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் வென்று நம்முடைய தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமரப்போவது உறுதி. கட்சி ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கணும்னா, நம்முடைய தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரணும்னா, அடுத்த இரண்டு மாதங்களுக்கு இங்கே வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் களத்தில் இறங்கி கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Union government ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Satal ,Thanjavur ,Udhayanidhi Stalin ,Union ,Minister of State ,S.S. Palanimanickam ,S.S. Rajakumaran-Sharmila… ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்