ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடமும், வாக்காளர்களிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், பவானி தொகுதியில் கடந்த 25 வருடங்களாக அதிமுகவில் தொடர்ந்து களத்தில் இருந்து வருபவர் கே.சி.கருப்பணன். இவர், 2001ல் முதல்முறையாக பவானி எம்எல்ஏ ஆனார். 2016ல் அதிமுக சார்பில் மீண்டும் வெற்றி பெற்றதோடு, அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து, 2021ல் வெற்றி பெற்று, சிட்டிங் எம்எல்ஏ.வாக உள்ளார்.
பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் தொகுதிகளை கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பின், வடக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு பெருந்துறை, பவானி தொகுதிக்கு மட்டும் கருப்பணன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் செங்கோட்டையன், கடும் நெருக்கடியை கொடுத்து வந்தார்.
செங்கோட்டையன் நீக்கப்பட்ட பின்னர், தனிக்காட்டு ராஜாவான கருப்பணன், உற்சாக மிகுதியில் இருந்தார். அதன்பின்னர், அதிமுக-பாஜ-டிடிவி தினகரன்-பாமக அன்புமணி கூட்டணி, கட்சிக்குள் பிளவுகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமின்மை போன்ற பல இக்கட்டான பிரச்னைகளால் கருப்பணன் உற்சாகம் இன்றி சோர்ந்து காணப்படுகிறார். இம்முறை பவானி தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், கட்சி தலைமை பவானி தொகுதியில் மீண்டும் போட்டியிட அறிவுறுத்தினால், வேறு வழியின்றி நிற்கவேண்டி வருமே என தவிப்பில் உள்ளார். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பவானி தொகுதியில்தான் போட்டியிட உள்ளார். அவரை தவிர்த்து பவானியில் வேறு யாரும் அதிமுக.வில் நிற்க மாட்டார்கள். கட்சிக்குள் சலசலப்பு, குழப்பம் உள்ளது. தேர்தல் அறிவித்தால் சரியாகி விடும்’’ என்றனர்.
