×

சாராயம் காய்ச்சினேனா, ஊர அடிச்சு உலையில் போட்டேனா? உங்களையே சுத்திசுத்தி வந்தனே என்னைய கைவிட்டுட்டீங்களே நான் அரசியல விட்டே போறேன்: ஜெயக்குமார புலம்ப வச்ச மக்கள்

சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: 2001ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற வைத்த நீங்கள் 2021ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே? அப்படி நான் என்ன தப்பு செய்தேன். ஊரை அடித்து உலையில் போட்டேனா? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனே, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணினேனத? சொல்லுங்க பார்க்கலாம்…

யாராவது அப்படி இருந்தா சொல்லுங்க, நான் அரசியலை விட்டு போய்விடுகிறேன். அந்த மாதிரி என்றைக்கும் அதிமுக கிடையாது. ஜெயக்குமாரும் கிடையாது. உங்களையே சுத்தி சுத்தி வந்தேன். இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன். நான் பொதுச்செயலாளர் கிட்ட கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லன்னா சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்பேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது: கேள்வி: நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்? மீண்டும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவீர்களா?

பதில்: இதில் என்ன சந்தேகம் இருக்கிறது. மயிலாப்பூரும் கிடையாது, வேறு எந்த ஊரும் கிடையாது. ஒரே ஊரு, அது ராயபுரம்தான். ராயபுரம் மக்கள் இன்றைக்கு தெளிவாக இருக்கிறார்கள். வெற்றியை எனக்கு கண்டிப்பாக தேடித் தருவார்கள். அதனால், ராயபுரம் தொகுதி மக்களை விட்டு எந்த காலத்திலும் நான் விலகி போக மாட்டேன். அதனால் வாழ்நாள் முழுவதும் ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன், கட்சி கட்டளையிடும் பட்சத்தில்.

கேள்வி: பாஜ அதிக சீட் கேட்பதாக கூறப்படுவதுடன், யார் யாரை சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறதே?

பதில்: எல்லாமே கட்சி தான் முடிவு செய்யும். நான் முடிவு செய்ய முடியாது. அதனால் இன்னும் 3 மாதம் தேர்தலுக்கு இருக்கிறது. கூட்டணி கட்சிகள் அதிக சீட்கள் கேட்கத் தான் செய்வார்கள். ஆனால், யாருடைய பலம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டுதான் கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சியில் புதிதாக யார் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது கட்சியின் கொள்கை விஷயம். இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல முடியாது. கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar ,Former Minister ,AIADMK ,Royapuram, Chennai ,elections ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்