தர்மபுரி மாவட்டம் பாமக கோட்டை என்று நிர்வாகிகள் தொடர்ந்து பெருமை பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி என்று இரண்டு துருவங்களாக கட்சியினர் பிரிந்து நிற்கின்றனர். இதில் அன்புமணி தரப்பு என்டிஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. அவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தன்னை ஒதுக்கிவிட்டு, மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் கொதிப்பில் ஆழ்ந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்நிலையில் அதிமுகவுக்கு எதிரான பலமான கூட்டணியில் இணைந்து மகனுக்கு பாடம் புகட்டவும் ஆயத்தமாகி வருகிறார். பாமகவை பொறுத்தவரை கட்சியில் பிளவு என்பது நிர்வாகிகளால் ஏற்படவில்லை. குடும்பத்தில் ஏற்பட்ட அதிகாரமோதல் காரணமாகவே நடந்துள்ளது.
மருமகள் சவுமியாவை பசுமை தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ், அதனை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி சேலம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார். இதேபோல் செயல்தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தர்மபுரியில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை தவிர்த்து, வேறு ஒரு தொகுதியில் போட்டியிட அன்புமணி முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியில் மனைவி சவுமியாவை நிறுத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ், தனது மகளை அந்த தொகுதியில் நிறுத்தப்போகிறார் என்ற தகவல், பாமக வட்டாரங்களில் புதிய புகைச்சலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்ேகாடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என்று 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
5 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாமக சார்பில் பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜி.கே.மணியும், தர்மபுரியில் போட்டியிட்ட வெங்கடேஸ்வரனும் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். ஜி.கே.மணி ராமதாஸ் அணியிலும், வெங்கடேஸ்வரன் அன்புமணி அணியிலும் உள்ளனர். 2024ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
4 லட்சம் வாக்குகளை பெற்ற அவருக்கு வெற்றி வாய்ப்பு கைநழுவிப்போனது. இதனால் சட்டமன்றத்தேர்தலிலும் சவுமியாவை நிறுத்த அன்புமணி முடிவு செய்துள்ளார். இதில் பாமக அதிக வாக்குகள் பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் சவுமியாவை நிறுத்த காய்நகர்த்தி வருகிறார். இதற்காக அன்புமணியிடம் தொண்டர்கள் மனு கொடுத்து விண்ணப்பிக்கும் படலமும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் ராமதாசிடம் அவரது மூத்தமகள் ஸ்ரீகாந்தியை, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடச் செய்யவேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர். சேலம் பொதுக்குழுவில் அன்புமணியை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்தி, சவுமியாவை எதிர்த்து போட்டியிடுவேன் என்பதையும் சூசகமாக சொல்லியிருந்தார். இதை கவனத்தில் கொண்டே நிர்வாகிகள், ராமதாசிடம் மனு அளித்து வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டியில் மகளும், மருமகளும் மோதலுக்கு தயாராகிவிட்டார்கள். இதனால் தர்மபுரியில் மற்ற தொகுதிகளை விட, பாப்பிரெட்டிப்பட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினார்.
