×

என்னை அடகு வச்சு பாஜகிட்ட சீமான் பணம் வாங்கிட்டாரு… மன்சூர் அலிகான் ‘குய்யோ முய்யோ’

மன்சூர் அலிகான், சினிமாவில் பயணித்து கொண்டே அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். தனது ஆரம்பகால வாழ்க்கையில், மன்சூர் அலிகான் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிப்பதன் மூலம் அரசியலில் களத்தில் குதித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வந்தார். 1999ம் ஆண்டு புதிய தமிழகம் வேட்பாளராக பெரியகுளம் தொகுதியிலும், 2009ம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

அதை தொடர்ந்து 2019ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் இணைந்தார். பிறகு சீமான் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். அதன் பிறகு தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியின் பெயரை இந்திய ஜனநாய புலிகள் என மாற்றினார்.

கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ பிரிந்து பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிகட்சி உள்ளிட்ட உதிரி கட்சிகளுடன் பாஜ தனியாக போட்டியிட்டது. அதிமுக கூட்டணியிலிருந்த சிறிய கட்சிகள் அனைத்தும் பாஜ கூட்டணியில் இணைந்ததால் அதிமுக கூட்டணியில் எந்த கட்சியும் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது, மன்சூர் அலிகான் கட்சியுடன் அதிமுக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று தூது விட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மன்சூர் அலிகான் தேர்தல் நிதி கேட்டிருந்தார். அதற்கு அதிமுக பச்சை கொடி காட்டி நேரில் பேச்சுவார்த்தை அழைத்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தேர்தல் குழுவினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் வரவில்லை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் போட்டியிடுவதா என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர், நிருபர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், ‘பெரியார் மண் இது. உண்மையை பேசுற மண். நான் சினிமாவில் உழைத்தேன், அரசியலிலும் நேர்மையா உழைத்தேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது என் சொந்த காசை போட்டு, மாடு மாதிரி உழைச்சேன். எந்த பதவிக்கும், எந்த லாபத்துக்கும் ஆசைப்படல. ஆனா இப்போதுதான் ஒரு உண்மை தெரிய வந்திருக்கு. சீமான் என்னை முன்னிலைப்படுத்தி, என்னை அடகுவைத்து பாஜவிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்’ என்றார். மன்சூர் அலிகானின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,Mansoor Ali Khan ,Guyyo Muyyo ,Patali Makkal Katchi ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்