இப்படியொரு சம்பவம் நடந்ததா என்கிறீர்களா? ஆம்… டிச. 24, 1987ல் எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது (அப்பவே ஆரம்பிச்சுட்டாங்களா என்கிறீர்களா). 1989ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. அப்போது தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்தது.
எனவே, வெற்றி வாய்ப்புள்ள இடத்தில் போட்டியிட விரும்பிய ஜெயலலிதா தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிட்டார். இவரது அணிக்கு அத்தேர்தலில் சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான போட்டியாளரை களமிறக்க ஜானகி அணி திட்டமிட்டது. அப்போது சினிமாத்துறையில் ஜெயலலிதாவுக்கு எதிராக வளர்ந்து வந்த வெண்ணிற ஆடை நிர்மலாவை களமிறக்கியது.
இருவருமே வெண்ணிற ஆடை படத்தில் மூலமாக அறிமுகமானவர்கள் என்பதால், ‘சபாஷ்… சரியான போட்டி’ என அனைவருமே யாருக்கு வெற்றி என்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தனர். ஜெயலலிதாவை அந்த தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென ஜானகி அணியினர் வீடு, வீடாக சென்று, ‘புரட்சித்தலைவருக்கு இரட்டை இலை… அவரது அரசியல் வாரிசு ஜானகிக்கு இரட்டைப்புறா’ என பிரசாரம் செய்தனர்.
இந்த பிரசாரத்திற்காக போடி தொகுதியில் பம்பரமாக சுழன்றவர் யார் தெரியுமா? நம்ம ஓ.பன்னீர்செல்வம் தான். தனக்கு தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் எல்லாம் பேசி, ஜானகி அணி வெற்றி பெற வேண்டுமென கடுமையாக போராடிப் பார்த்தார். கடைசியில் ஜெயலலிதா இந்த தொகுதியில் 57,603 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். வெண்ணிற ஆடை நிர்மலா வெறும் 6,354 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
அந்த தேர்தலில் பெற்ற பெரும் தோல்வியால், வேறு வழியின்றி ஜானகி அணி அந்த தேர்தலோடு கட்சியை கலைத்து விட்டு சென்றது. அதன்பிறகு ஜெயலலிதாவின் தலைமையேற்று அதிமுகவில் நகரச் செயலாளரில் துவங்கி பல்வேறு பதவிகளை பெற்றார் ஓ.பன்னீர்செல்வம். பிறகு ஜெயலலிதாவே, ஓ.பன்னீர்செல்வத்தை, முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தது நீங்கள் அறிந்த விஷயம் தானே…!
