×

எம்எல்ஏவானது அதிமுகவுல… பெயர் போட்டது தவெகவுல… செங்க்ஸை சுத்து போட்ட ரத்தத்தின் ரத்தம்

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில், நம்பியூர் அருகே கோசனம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.8.50 லட்சத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நிழற்குடையில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ என தவெக கட்சிக் கொடி கலரில் எழுதப்பட்டது.

இதை கண்டித்து நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அதிமுகவினர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவர்கள் கூறுகையில், ‘கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், தவெக கலரில் அவரது பெயர் எழுதப்பட்டு இருப்பது, தவெகவில் எம்எல்ஏவாக இருந்த போது கட்டப்பட்ட நிழற்குடை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் அடிப்படையிலேயே தவெக கலரில் எழுதப்பட்டு இருக்க கூடும்.

இதை அழிக்காவிட்டால், அதிமுகவினர் திரண்டு பெயர் அழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். இதையடுத்து நேற்று காலை நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட நிழற்குடையை ஆய்வு செய்து அங்கு தவெக கலரில் எழுதப்பட்டிருந்ததை மஞ்சள் பெயிண்ட் கொண்டு அழித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுகவினர் நள்ளிரவு நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

* புறக்கணித்த மா.செக்கள் அப்செட் ஆன செங்ஸ்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது முதல் அவர் வயதுக்கும், அரசியல் அனுபவத்துக்குமான மரியாதை அங்கு கேள்விக்குறியாகவே உள்ளது. யாரும் அவரை பொருட்டாக கருதுவதில்லை. சென்னையில் நடக்கும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு அடுத்த கட்டத்த்தில் தான் செங்கோட்டையனை விஜய் வைத்துள்ளார். கடந்த வாரம் கோவையில் தவெக நிர்வாகிகளிடம் ரகசிய ஆலோசனை நடத்த ஓட்டலில் அறை எடுத்து செங்கோட்டையன் தங்கியுள்ளார்.

பின்னர் கோவையில் உள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கும் தனித்தனியே போன் செய்து பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டியுள்ளது என கூறி அழைத்துள்ளார். ஆனால் சொல்லி வைத்ததுபோல 5 மாவட்ட செயலாளர்களும் தாங்கள் வெளியூரில் இருப்பதாகவும், வேறு வேலை இருப்பதாகவும் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லி தட்டி கழித்துள்ளனர். இதனால் கடும் அப்செட்டான செங்கோட்டையன், சென்னையில் நடக்கும் கூட்டத்திலும் தன்னை மதிப்பதில்லை, கொங்கு மண்டலத்தை பலப்படுத்த திட்டமிட்டால் இங்குள்ள மாவட்ட செயலாளர்களும் தன்னை கண்டு கொள்வதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்.

Tags : MLA ,AIADMK… ,Thaveka… ,Senks ,Former minister ,K.A. Sengottaiyan ,AIADMK ,Thaveka ,Kosanam ,Nambiyur ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்