சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடியிலான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தற்போது ரூ.25 கோடி செலவில் தரை மற்றும் 5 தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை என மொத்தம் ரூ.208 கோடியே 97 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்ட 6 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி, பெரம்பலூர் மாவட்டம் – கிருஷ்ணாபுரம் ஆகிய 14 அரசு மருத்துவமனைகளில் ரூ.72 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தல்:
சென்னை, கிண்டி உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.9 கோடியே 91 லட்சம் செலவில் புதிய கட்டிடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம் என மொத்தம் ரூ.15 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் 98 பல்வேறு சுகாதார நிலையக் கட்டிடங்கள் ரூ.48 கோடியே 43 லட்சம் செலவிலான கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடியிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குநர் (பொறுப்பு) லால்வேனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
