குன்னூரில் இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் உலா வந்த 2 சிறுத்தைகள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

 

குன்னூர்: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 2 சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். ​நீலகிரி மாவட்டம், ​​குன்னூர் அருவங்காடு அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில், இன்று (வெள்ளி) அதிகாலை நேரத்தில் 2 சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்தன. அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாக பகுதியில் நீண்டநேரம் சுற்றித்திரிந்த இந்த சிறுத்தைகள், பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. ​

சிறுத்தைகள் கிராமத்தின் தெருக்களில் உலா வரும், இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. ​கடந்த சில நாட்களாகவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் வளர்க்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. ​தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். வனத்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: