சென்னை: தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோயில் நிலத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், ஆர்டர்லி முறையை ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசாணையை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென்று கூறி அரசாணையை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
