சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் நேற்று பிற்பகலில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 3.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து, உடனடியாக மாலை 3.25 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்றார்.
அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, மாலை 6.40 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். இந்த நிலையில் அந்த ஓட்டலில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாஜ மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பாஜ முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தேர்தல் நிலவரம் குறித்து கேட்டறிய உள்ளார். வெற்றி வியூகம், தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார். உள்கட்சி மோதல் குறித்தும் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் அவர் அவர்களை எச்சரிப்பார் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, பகல் 1.10 மணியளவில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து, காரில் புறப்பட்டு, பகல் 1.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் சென்னை பிரசாரம், ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.
