கிங்ஸ் கோப்பை கால்பந்து; பார்ட்டி மூடில் பார்சிலோனா: அல்பசெடேவை வென்று செமிபைனலுக்கு தகுதி

அல்பசெடே: கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த பார்சிலோனா அணி, அல்பசெடே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் நாட்டின் அல்பசெடே நகரில் கோபா டெல் ரே எனப்படும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 1902ம் ஆண்டு முதல் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணி, யுஇஎப்ஏ யூரோபா லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறும்.

கிங்ஸ் கோப்பைக்காக நேற்று நடந்த போட்டியில் பார்சிலோனா அணியும், அல்பசெடே அணியும் மோதின. போட்டியின் துவக்கம் முதல் பார்சிலோனா அணி வீரர்கள் அட்டகாசமாக ஆடி, பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போட்டியின் 39வது நிமிடத்தில் அந்த அணியின் லாமினே யாமல் தனது அணிக்காக முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணியின் ரொனால்ட் அராஜோ, 56வது நிமிடத்தில் அணியின் 2வது கோல் போட்டு வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். போட்டியின் கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய அல்பசெடே அணி வீரர்கள் எப்படியாவது கோல் போட்டு விட வேண்டும் என்ற முனைப்பை காட்டினர்.

அதற்கு பயன் அளிக்கும் வகையில், 87வது நிமிடத்தில் அந்த அணியின் ஜாவி மொரெனோ சிறப்பாக ஆடி முதல் கோல் போட்டார். அதன் பின் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் போட்டியில் வலென்சியா – அத்லெடிக் கிளப் அணிகள் மோதவுள்ளன.

Related Stories: