சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளதாக ஒன்றிய பாஜ அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடந்து வருகிறது. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் அவையில் பேச முற்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், நேற்று எதிர்கட்சித் தலைவர் எழுந்து பேச முற்பட்ட போது அவரை பேசவிடாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை பேசுமாறு சபாநாயகர் அழைத்தார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து சபாநாயகர் முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திற்குள்ளேயே எதிர்கட்சி தலைவர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்களின் குரல்வளையை நெரித்து உரிமைகளைப் பறித்துள்ளது ஜனநாயகப் படுகொலையாகும். ஒன்றிய பாஜ அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் வலுவாக கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென்றும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கைகயை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், நாடாளுமன்ற அவையை ஜனநாயகப் பூர்வமாக நடத்திட ஒன்றிய பாஜ அரசு முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
