பல்கலைக்கழக இணைப்பு முறைகேடு விவகாரம் அண்ணா பல்கலை. இயக்குனர் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: பல்கலைக்கழக இணைப்பு முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பிரிவு இயக்குனர் கிரிதேவ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-24ம் கல்வியாண்டில், அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்தபோது, 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர ஆசிரியர்களாக பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விதிமீறலை ஏற்றுக்கொண்டு, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக இணைப்பு வழங்கியதாக, இணைப்பு பிரிவு தற்போதைய இயக்குனர் கிரிதேவ் உள்ளிட்ட 10 அதிகாரிகளுக்கு எதிராகவும், தனியார் கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் என 17 பேருக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரிதேவ் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், 2023-24ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக இணைப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 10 மாதங்களுக்குப் பிறகு 2024 மே மாதம்தான் தானி இயக்குனராக பொறுப்பேற்றதாகவும், இந்த முறைகேடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பொறுப்பேற்ற பிறகு ஆதார் அடிப்படையில் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டு, முறைகேடு தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனுதாருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு முகாந்திரம் இல்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

 

Related Stories: