57வது நினைவு நாள் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை: அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவுநாளையொட்டி, அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி நடந்தது.

பேரணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னே நடந்து செல்ல அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ், கோவி.செழியன், மெய்யநாதன்,

ராஜேந்திரன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜெ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், டாக்டர் எழிலன், வெற்றியழகன், வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உடன் சென்றனர்.

மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், திமுக மாற்று திறனாளிகள் அணி தலைவர் ரெ.தங்கம், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், இணை செயலாளர் பி.டி.பாண்டி செல்வம், துணை செயலாளர் வி.பி.மணி, பகுதி செயலாளர் மதன் மோகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பா.சக்திவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி நடந்தது. தொடர்ந்து அமைதி பேரணி காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முடிந்தது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

* ஆண்டுகள் எத்தனை ஆனாலும் தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
‘‘ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்’’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அண்ணா தமிழர்களின் மனசாட்சி; நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு. அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட் அவுட் தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: