சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது தமிழ்நாடு தலைகுனியாது பிரசாரத்தை தொடங்கியது திமுக

* மக்களுடன் உணவருந்தி அரசின் திட்டங்களையும், ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் விளக்கி வருகின்றனர்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு தலைகுனியாது பிரசாரத்தை திமுக நேற்று தொடங்கியது.  தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் திமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 20ம் தேதி நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 20 நட்சத்திர பேச்சாளர்கள் தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்த மாதம் முழுவதும் தீவிரமாக பிரசாரப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பிரசாரம் நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஊத்தங்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருப்போரூரில் நடைபெற்ற கூட்டத்தில் சபாபதி மோகன், ராயபுரம்- திண்டுக்கல் ஐ.லியோனி, நிலக்கோட்டை-பொன். முத்துராமலிங்கம், கிருஷ்ணராயபுரம்- ஏ.கே.எஸ்.விஜயன், திருவள்ளூர்- இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதே போல ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப் பயணத்தின் போது திமுகவினர் மக்களுடன் இருந்து, அவர்களுடன் உணவு சாப்பிட்டு அவர்களுக்கு இதுவரை திமுக அரசு செய்திதுள்ள திட்டங்களை விளக்கி வருகின்றனர். மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து செய்துவரும் துரோகத்தையும் கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுகவினர் இந்த புதிய முன்னெடுப்பு அனைத்து தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories: