சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை மேல்மட்டத்தில் சுமுகமாக நடந்து வருகிறது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 131வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி; திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கனிமொழி, ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திவந்துள்ளார். மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்ததும் அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது. அதனால் தான் தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். அதைதான் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று விமான நிலையத்தில் சுட்டிகாட்டினார். அதை தாண்டி அரசியல் ரீதியாக இதை மிகைப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், காங்கிரஸ் துணைத் தலைவர் இமயா கக்கன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம் மோகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.செல்வம், நிர்வாகிகள் புத்தநேசன், எஸ்.எம்.குமார், அடையாறு பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
