சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வரும் 6ம் தேதி ரூ.359.46 கோடி மதிப்பிலான 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை : அயப்பாக்கம் டி.என்.எச்.பி. பகுதியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து, சிஎஸ்ஆர் பெருநிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதி திட்டம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய 41 துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் 399 துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்களுக்கு கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கருவில் உள்ள குழந்தைகளின் இதயத்துடிப்பை கண்டறியும் டாப்லர் கருவியினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று வழங்கினர். அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம், திண்டிவனம் ஆகிய 7 இடங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.229.24 கோடி மதிப்பீட்டிலான புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். அதேபோல் ரூ.104 கோடி செலவில் கட்டப்பட்ட 23 இடங்களில் மருத்துவக் கட்டமைப்பு திறந்து வைக்கப்பட உள்ளது.

ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை கிண்டியில் ஒரு உணவு பகுப்பாய்வு கூடத்தில் நுண்ணுயிரியியல் ஆய்வகம், அதேபோல் மதுரையில் ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட உள்ளது. மொத்தமாக 6ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ரூ.359.46 கோடி மதிப்பீட்டிலான 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.

இதனை தவிர தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கீழ் 1,178 முகாம்கள் முடிவடைந்து 16,74,161 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி , துரை சந்திரசேகர் , பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் மருத்துவர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Related Stories: