விஜயகாந்த் இருக்கும்போது கூட சொன்னாங்க… இப்போவும் பேரம் பேசுவதாக யூடியூப்புல அவதூறு பரப்புறாங்க… பிரேமலதா குமுறல்

நாகர்கோவில்: ‘கூட்டணி அமைக்க தொகுதிகள் பற்றி பேசினால் பேரம் பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள், விஜயகாந்த் தைரியமும், வீரமும் எனக்கும் உண்டு’ என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறினார்.  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜாக்கமங்கலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது: எல்லா கட்சிகளையும் போல, நாங்களும் கூட்டணி குறித்தும், தொகுதி குறித்தும் தான் பேசுகிறோம்.

நாங்க பேசினால் மட்டும் பேரம், பேரம் என்கிறார்கள். சில யூடியூப் சேனல்கள் அவர்களின் டிஆர்பி ரேட்டுக்காக எங்களை பேரம் பேசுவதாக சொல்றாங்க. விஜயகாந்த் இருக்கும் போது கூட இப்படி அவதூறு பரப்பினாங்க. கூட இருந்து பார்த்த மாதிரி போடுவாங்க. அப்போது அவர் கிட்ட நாங்க சொல்வோம். அவர் சொல்வார், நம்மள வைச்சி பிழைப்பு நடத்துறாங்க. அதை நாம் ஏன் தடுக்கணும் என்பார். அது போல இப்போதும் தேமுதிக வச்சு தான் சில யூடியூபர்கள் பிழைக்கிறாங்க. நான் கவலைப்பட மாட்டேன்.

எந்த பேரத்துக்கும் தேமுதிக அடிபணியாது. தேமுதிகவையும், தொண்டர்களையும் தலைகுனிய விடமாட்டேன். மகத்தான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும். நான் விஜயகாந்தின் மனைவி. அவரது தைரியமும், வீரமும் எனக்கும் இருக்கிறது. எனவே எந்த அச்சுறுத்தலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வெகு விரைவில் தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

* நான் நிச்சயம் போட்டி
பிரேமலதா அளித்த பேட்டியில், ‘கட்சி தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன். கூட்டணி, தொகுதி உடன்பாடுகள் முடிந்த பின் இது பற்றி உறுதியான அறிவிப்பு வரும்’ என்றார்.

Related Stories: