தேர்தல் நேரமாக இருந்தும் கூட தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிப்பு: ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கைவிரிப்பு

* நெடுஞ்சாலை, ரயில்வே திட்டங்கள் எதுவும் இல்லை, மதுரை, கோவை மெட்ரோ ரயில், சென்னை 3ம் கட்ட மெட்ரோ அறிவிப்பு இல்லை

* புதிய தொழில் திட்டங்களும் இல்லை, விவசாயத் துறையை கண்டுகொள்ளவே இல்லை

* வருமான வரியிலும் சலுகை இல்லை, மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே இல்லை

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையிலும் கூட, தமிழ்நாட்டிற்கு எந்த முக்கிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நெடுஞ்சாலை, ரயில்வே திட்டங்கள் இல்லை. மதுரை, கோவை மெட்ரோ ரயில், சென்னை 3ம் கட்ட மெட்ரோ அறிவிப்பு இல்லை. புதிய தொழில் திட்டங்கள் இல்லை. விவசாயத்துறை கண்டுகொள்ளப்படவில்லை. வருமான வரியிலும் சலுகையில்லை.

மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே இல்லாத ஒன்றிய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வரும் 2026-27ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து அனுமதி கோரினார். சம்பிரதாய வழக்கப்படி, ஜனாதிபதி முர்மு தயிர்-சர்க்கரையை ஊட்டிவிட்டு, நிர்மலா சீதாராமனுக்கு ஒப்புதல் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்க, காலை 11 மணிக்கு மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, அடுத்த நிதியாண்டிற்கான அரசின் திட்டங்கள், ஒதுக்கீடுகள் குறித்து உரையாற்றினார். சுமார் 85 நிமிடங்கள் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் கூறியதாவது:

* மாறிவரும் நோய்களின் தன்மை மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவை உலகளாவிய உயிர் மருந்து உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘பயோபார்மா சக்தி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
* மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனங்களை (என்ஐபிஇஆர்) வலுப்படுத்தும் வகையில் 3 புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும். மேலும், தற்போதுள்ள 7 என்ஐபிஇஆர் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படும்.
* புதிய மருந்துகளைப் பரிசோதிக்க இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை மையங்கள் உருவாக்கப்படும்.
* இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், மருந்துகளுக்கான ஒப்புதல் காலத்தைக் குறைக்கவும் பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* செமிகண்டக்டர் திட்டம் 2.0 தொடங்கப்படும். இது உபகரணங்கள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்யவும், முழுமையான இந்திய அறிவுசார் சொத்துரிமைகளை வடிவமைக்கவும், தொழில்நுட்பம் மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்கத் தொழில் துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களில் கவனம் செலுத்தி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும்.
* மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சென்னை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு, மும்பை-புனே, புனே-ஐதராபாத், டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி ஆகிய 7 அதிவேக புல்லட் ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
* வருங்கால சாம்பியன்களை உருவாக்க ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் சிறு, குறு நடுத்தர தொழில்துறை வளர்ச்சி நிதி அமைக்கப்படும்.
* காதி மற்றும் கைத்தறியை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் திட்டம் தொடங்கப்படும்.
* ஜவுளி துறையில் மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்கள் தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.
* ஒரு லட்சம் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* உயர்தர விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான பிரத்யேக முயற்சி மேற்கொள்ளப்படும்.
* கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சுரங்கம், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, பிரத்யேக அரிய மண் தாது வழித்தடங்கள் நிறுவப்படும்.
* ஆதிச்சநல்லூர் உட்பட 15 இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை காப்பதற்கான காட்சி மையம் அமைக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற திட்டம் ஊக்குவிக்கப்படும்.
* நகர்ப்புற வளர்ச்சியை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, கோவை-ஈரோடு-திருப்பூர், புனே, சூரத், வாரணாசி, விசாகப்பட்டினம், பெங்களூரு, புவனேஸ்வர்-பூரி-கட்டாக் ஆகிய 7 நகரப் பொருளாதார பகுதிகள் அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டு நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.
* நகர பொருளாதார பகுதிகள் மற்றும் பிராந்திய மருத்துவ மையங்கள் ஆகிய 2 புதிய திட்டங்களுக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 2ம், 3ம் நிலை நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்.
* மருத்துவ சுற்றுலா சேவை மையமாக இந்தியாவை மேம்படுத்த, 5 பிராந்திய மருத்துவ மையங்கள் நிறுவப்படும்.
* மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் 15,000 மேல்நிலைப் பள்ளிகள், 500 கல்லூரிகளில் அனிமேஷன், கேமிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 2027 நிதியாண்டில் ரூ.12.2 லட்சம் கோடி செலவிடப்படும். கலிங்கநகரில் புதிய தொழில் மையம் மற்றும் கடல் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்படும்.
* 2047ல் சேவைத்துறையில் உலகின் முன்னணி நாடாக உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.
* நிதிக்குழு பரிந்துரைப்படி, 2026ல் மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்.
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும்.
* நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அடுத்த நிதியாண்டில் அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க வாய்ப்புள்ளது.
* 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும்.
* கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை 20,000-க்கும் மேலாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
* முக்கிய தொழில்துறை மற்றும் தளவாட வழித்தடங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும்.
* தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப கவுன்சில், தேசிய விருந்தோம்பல் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றுவதற்காக கேலோ இந்தியா இயக்கம் தொடங்கப்படும்.
* உயர் மதிப்புப் பயிர்களுக்கு அரசு ஆதரவளிக்கும். அதன்படி, கடலோரப் பகுதிகளில் தென்னை, சந்தனம், கோகோ மற்றும் முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தென்னை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
* வேளாண் துறை வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
* புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கப்படும்.
* 7 அரியவகை நோய்களுக்கு மருந்துகள் இறுக்குமதிக்கான வரிகளும் நீக்கப்படும்.
* மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
* உள்நாட்டில் பயிற்சி விமானங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களுக்கு சுங்கவரி நீக்கப்படும்.
* மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்கவரி விலக்கு.
* இந்தியாவில் டேட்டா சென்டர்கள் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ம் ஆண்டு வரை வரி சலுகை வழங்கப்படும்.
* சோலார் பேனல் கண்ணாடிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் சோடியத்திற்கு முழு வரி விலக்கு வழங்கப்படும்.
* கடல்சார் உணவு ஏற்றுமதிக்கு வரிச்சலுகை வழங்கப்படும்.
* வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்.
* விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு.
* மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களை தயாரிப்பதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்
* தோல், சிந்தடிக் காலணி மூலப்பொருட்களுக்கு இறுதிமதிக்கு வரிச்சலுகை வழங்கப்படும்.
* வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2 சதவீதமாக குறைக்கப்படும்.
* கல்வி சுகாதாரத்திற்கான டிசிஎஸ் 2 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
* வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
* புதிய வருமான வரிச்சட்டங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
* ஒன்றிய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளது. 2027ல் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும். இதை ஈடுகட்ட அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த பட்ஜெட் எந்த தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக அமையவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அதை மையமாக வைத்தாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் என நிறைய திட்டங்கள் அறிவிக்கப்படும் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். மதுரை, கோவை மெட்ரோ திட்டம், சென்னைக்கு 3ம் கட்ட மெட்ரோ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்தனை எதிர்பார்ப்புகளும் தவிடுபொடியாகும் வகையில் எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பொதுவாகவே ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படும் நிலையில், தேர்தல் நேரத்திலும் கூட புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. கடந்த பட்ஜெட்டின் போது பீகார் தேர்தலை குறிவைத்து அம்மாநிலத்திற்கு நிதிகளும் திட்டங்களும் அள்ளித்தரப்பட்ட நிலையில், இம்முறை தமிழ்நாட்டிற்கு கிள்ளிக் கூட தரப்படவில்லை. மேலும், இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் எந்த சலுகைகளும் இல்லாததால் பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன.

* கொள்கலன் உற்பத்தி திட்டம்
உலகளவில் போட்டி நிறைந்த கொள்கலன் உற்பத்தி சூழலை உருவாக்குவதற்காக ரூ.10,000 கோடி செலவில் கொள்கலன் உற்பத்தி திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கப்பதையும், இந்தியாவில் தயாரிப்போம் என்ற முன்முயற்சிகளை ஆதரிப்பதையும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த முதலீடு சரக்கு போக்குவரத்து தளவாடத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த அறிவிப்பு இந்தியாவின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. கிழக்கில் தங்குனி, மேற்கில் உள்ள சூரத்தை இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு வழித்தடம். ஒடிசாவில் தொடங்கி, தல்சர் மற்றும் அங்குல் மற்றும் கலிங்கா நகர் போன்ற தொழில்துறை மையங்களை பரதீப் மற்றும் தாம்ரா துறைமுகங்களுடன் இணைக்கும் நீர்வழிப்பாதை உட்பட அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழி பாதைகளை அரசாங்கம் செயல்படுத்தும்.

வாரணாசி மற்றும் பாட்னாவில் உள்நாட்டு நீர்வழிகளுக்கான கப்பல் பழுது பார்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பும் அமைக்கப்படும். 2047ம் ஆண்டளவில் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்தின் பங்கை 6 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்தத, ரயில் மற்றும் சாலை மார்க்கத்தில் இருந்து ஒரு மாதிரி மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் கடலோர சரக்கு மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

* இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை புறக்கணித்துள்ளது வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் வழியே இல்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஒன்றிய பட்ஜெட் இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை புறக்கணித்துள்ளது. வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் வழியே இல்லை. விவசாயிகள், ஏழை குடும்பங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனம் வருமாறு:

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்தியாவின் உண்மையான பிரச்னைகளான வேலையின்மை, விவசாயிகளின் துயரம், உறபத்தி சரிவை புறக்கணிப்பதாக உள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதையும், உற்பத்தி குறைந்து வருவதையும், விவசாயிகள் துயரத்தில் இருப்பதையும் பட்ஜெட் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உற்பத்தி சரிந்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை திரும்பப் பெறுகின்றனர். குடும்ப சேமிப்பு அதலபாதாளத்திற்குச் செல்கிறது.

விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். இந்தியாவில் வரவிருக்கும் உலகளாவிய அதிர்ச்சிகள் இவை. இந்த பிரச்னைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. திசை மாற்றத்தை மறுக்கும், இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை புறக்கணிக்கும் ஒரு பட்ஜெட்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: பட்ஜெட் மந்தமானது, ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை கண்திறந்து பார்க்கவில்லை. மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. 2026 பட்ஜெட் இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வைக் கூட வழங்கவில்லை. மிஷன் மோடு இப்போது சேலஞ்ச் ரூட் ஆகிவிட்டது. நிகர விளைவு: கொள்கை தொலைநோக்குப் பார்வை இல்லை, அரசியல் விருப்பம் இல்லை. இந்த பட்ஜெட் எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை, கொள்கையின்மையின்மையை மறைக்க முழக்கங்களைக் கூட வழங்கவில்லை.

* பட்ஜெட் பற்றாக்குறை: ரூ.16.95 லட்சம் கோடி
வரும் 2026-27 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிகர வரி வருவாய் ரூ.28,66,922 கோடி. வரி அல்லாத வருவாய் ரூ.6,66,228 கோடி. இதன்மூலம் மொத்தம் ரூ.35,33,150 கோடி. இது தவிர மூலதன வருவாய் உட்பட மொத்தம் ரூ.53,47,315 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், வட்டி உள்ளிட்ட செலவினங்கள் ரூ.53,47,315 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் செலவுகளுக்காக ரூ.16,95,768 கோடி கடன் வாங்கப்படுகிறது. இந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* மொத்த பட்ஜெட் ரூ.53.47 லட்சம் கோடி
வரும் 2026-27ம் நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ.53.47 லட்சம் கோடி. இது, வரும் மார்ச் 31ம் தேதி முடிவடையும் நடப்பு நிதியாண்டிற்கான (2025-26) ஒதுக்கீட்டை விட 7.7 சதவீதம் அதிகம். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ரூ.49.64 லட்சம் கோடி. இது, பிப்ரவரி 2025ல் மதிப்பிடப்பட்ட ரூ.50.65 லட்சம் கோடியை விட குறைவு. இதுவே 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ரூ.46.52 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு
அரசின் பற்றாக்குறையை ஈடுகட்ட ஒன்றிய அரசு வரும் 2026-27 நிதியாண்டில் மொத்தம் 17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் 1.40 லட்சம் கோடி கடன் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மொத்தம் 1.46 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக திருத்திய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய இதுவரை வாங்கி கடனுக்கு வரும் நிதியாண்டில் மொத்தம் ரூ. 14 லட்சத்து 3972 கோடி வட்டியாக செலுத்த உள்ளது. கடந்த நிதியாண்டில் வட்டியாக ரூ.12.7 லட்சம் கோடியை ஒன்றிய அரசு செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: