ஏரிக்கரையில் திடீர் தீயால் புகைமூட்டம் போராடி அணைப்பு

ராசிபுரம், ஜன.30: ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதியில், குப்பை மற்றும் கோழி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கட்டிட கழிவுகள், அட்டை பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். நேற்று மதியம் மர்ம நபர்கள் சிலர், குப்பை கழிவுகள் மற்றும் காய்ந்த முட்கள் மீது தீ வைத்து சென்று விட்டனர். இந்த தீ வேகமாக பரவி ஏரி முழுவதும் பற்றியது. ரயில்வே மேம்பாலம் பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘ஏரிக்கரையோரம் சிலர் அடிக்கடி குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் பலர் கோழிக்கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: