திருத்தணி, ஜன.28: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தை கிருத்திகை மற்றும் முருகப் பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை சேர்ந்து வந்ததால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்தனர். அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொது வரிசை மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன வழியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தை கிருத்திகையொட்டி, சாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் மற்றும் திருப்படிகள் வழியாக மலையில் குவிந்தனர். இதனால், கோயில் மாட வீதிகளில் அரோகர முழக்கங்களுடன் பக்தர்கள் பொது வழியில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலை வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இங்கு, 6 வாரங்கள் தொடர்ச்சியாக வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தை கிருத்திகை, செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்தால் மனநிறைவைத் தருவதாகவும், வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுவதாகவும், பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 6 வாரங்கள் தொடர்ச்சியாக வரும்போது மனதிற்கு நிறைவை தருவதாக, மகிழ்ச்சி தெரிவித்தனர்.
