கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் கே.சுரேஷ்குமார, பள்ளியின் நிறுவனர் ஏ.திருஞானம் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.பாலமுருகன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனி வட்டாட்சியர் ரஜினிகாந்த், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெய்கர் பிரபு, பள்ளியின் தாளாளர் திருஞானம் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாவட்டத் துணை ஆட்சியர் பாலமுருகன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெட்டம்பேடு சாலை வரை சென்றது. மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பதாகைகள் ஏந்தி விழப்புணர்வு ஏற்படுத்தினர். ஊத்துக்கோட்டை: 16வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் சார்பில், தாலுகா மற்றும் பேரூராட்சி ஊழியர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்து கலந்துகொண்டார்.

துணை வட்டாட்சியர் நாகசவுந்தரி, தேர்தல் துணை வட்டாட்சியர் பாரதி, வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன், விஏஓ அருள், பேரூராட்சி தலைமை எழுத்தர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி நேரு பஜார், நேரு சாலை, அண்ணாசிலை நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று விஏஓ அலுவலகம் அடைந்தது. அங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பொன்னேரி: 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதனை பொன்னேரி சப்-கலெக்டர் ரவிகுமார் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நேர்மையானவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்போம், வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைதொடர்ந்து, பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதனை பொன்னேரி சப்-கலெக்டர் ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 18 வயதிற்கு மேல் உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியபடி கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர். சப்-கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், தேரடி சந்திப்பு வரை சென்று மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

Related Stories: