தீவிர நோய் தாக்குதல் காரணமாக 50 நாட்டு கோழிகள் பலி

திருவள்ளுர், ஜன.23: திருவள்ளூர் அருகே கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகள் தீவிர நோய் தாக்குதலுக்குள்ளாகி, உயிரிழந்து வருகின்றன. திருவள்ளுர் அடுத்து கடம்பத்தூர், வயலூர் சிவாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள், திடீரென தீனி எடுக்க முடியாமல் சுருண்டு விழுந்து ரத்தமாக கழிவுகள் வெளியேற்றி உயிரிழந்து விடுகின்றன. 50க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதால், கோழி வளர்ப்போர் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோழிகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஜெயந்தி உத்தரவின்பேரில், உதவி இயக்குநர் மருத்துவர் தாமோதரன் மேற்பார்வையில், உளுந்தை கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் ஆஷா, வயலூர் சிவாஜி நகரில் ஆய்வு செய்து, உயிரிழந்த கோழிகளை பிரேத பரிசோதனை செய்து, அதன் பாகங்களை சோதனை மேற்கொள்வதற்காக மாதாவரத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார். திடீரென்று கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதால், நோய் தாக்குதலால் தான் அவை உயிரிழந்து வருகிறதா அல்லது யாராவது விஷம் வைத்து கொன்றார்களா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த கோழிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: