பொன்னேரி-ஆரணி இடையே மினி பேருந்து சேவை தொடக்கம்

பெரியபாளையம், ஜன.22: பொன்னேரி-ஆரணி இடையிலான வழித்தடத்தில் புதிதாக மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொன்னேரியில் இருந்து-ஆரணி வரை போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் தங்கள் பகுதிக்கு மினி பேருந்து இயக்க வேண்டும் என, கடந்த 9ம் தேதி பாடியநல்லூரில் நடைபெற்ற தமிழக அரசின் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, ஆரணி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற கல்லூரி மாணவி தங்கள் பகுதிக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும், இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், எனவே மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், புதிதாக பொன்னேரி-ஆரணி வழித்தடத்தில் மினி பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு, கொடியசைத்து மினி பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, கல்லூரி மாணவி பிரியங்கா தனது கோரிக்கையை ஏற்று மினி பேருந்து சேவையை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்குமாறு அவரிடம் கூறினார். இந்நிகழ்ச்சியில், பொன்னேரி தொகுதி திமுக தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார், சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.ஆனந்தகுமார், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.தீபன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜாராம், தச்சூர் ஓ.தசரதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வல்லூர் தமிழரசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: