பிலிபிட்: உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து நடந்த பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி இரவு 17 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்ததால் அந்த நபர் தப்பியோடினார். ‘குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக அந்த நபர் மிரட்டியதால் முதலில் புகார் அளிக்கவில்லை. ஆனால் மிரட்டல் தொடர்ந்ததால் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிஎன்எஸ் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே இதே மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள கிராமத்தில் 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனியாக வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த 2019ம் ஆண்டும், தந்தை 2022ம் ஆண்டும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர். சித்தப்பா பராமரிப்பில் இருந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கதவு திறந்திருந்ததை பார்த்த 28 வயது அண்டை வீட்டுக்காரர், உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அத்துமீறி நுழைதல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.
