நாகர்கோவில்: கன்னியாகுமரி கொட்டாரம் தனேஷ் (28) என்பவருக்கும், ஈத்தாமொழியை சேர்ந்த தனுசா (25) என்பவருக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இம்மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.அப்போது தனுசா, ரூ.35 ஆயிரம் கொடுத்து புதிதாக ஐ போன் வாங்கி தருமாறு தனேசிடம் கேட்டுள்ளார். மனைவியாக வர போகிறவள் தானே என்ற ஆசையில் அவரும், ரூ.85 ஆயிரத்துக்கு புதிதாக ஐ போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்யும்படி பெற்றோரிடம் தனுசா கூறினார். இரு குடும்பத்தினரும் சமாதானம் பேசியும் கேட்காததால் திருமணத்தை ரத்து செய்தனர்.
அதைத்தொடர்ந்து தனேஷ் வாங்கி கொடுத்த ஐ போனை திரும்ப கொடுத்து ரூ.35 ஆயிரத்தை திருப்பி தருமாறு தனுசா கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று கொட்டாரம் அச்சன்குளம் அருகே நின்றிருந்த தனேசை காரில் வந்த சிலர் அவதூறாக பேசி தாக்கி, செல்போனை பறித்து கத்தியை காட்டி மிரட்டி பாஸ்வேர்டு கேட்டு வாங்கி தனுசாவுக்கு ஜி பே நம்பருக்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பிவிட்டு தப்பினர். இது குறித்து தனேஷ் புகாரின்படி கன்னியாகுமரி போலீசார் தனுசா உள்பட சிலர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
