வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தொழிலதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 4 பேர் கும்பலுக்கு வலை

மேட்டுப்பாளையம்: எஸ்பி.வேலுமணி முன் அதிமுகவில் இணைந்த தொழிலதிபரை சரமாரி அரிவாளால் வெட்டிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேனாடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). தொழிலதிபரான இவருக்கு ஊட்டியில் தேயிலை எஸ்டேட் உள்ளது. அண்மையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இவர் நேற்று கோத்தகிரியில் இருந்து சொகுசு காரில் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தென்திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் முதியோர் காப்பகம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக டிரைவரிடம் கூறி காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த புதருக்குள் சென்றார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரின் முகத்தை தவிர உடல் பாகங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் சிவக்குமார் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து காரமடை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: