107 கிராம் எம்டிஎம்ஏவை விழுங்கி கடத்திய ஆசாமி கைது

திருவனந்தபுரம்:107 கிராம் எம்டிஎம்ஏவை கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய ஆசாமியை திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு துறையினர் கைது செய்தனர்.பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு எம்டிஎம்ஏ எனப்படும் உயர் ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக மாநில எல்லைகளில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரும் அரசு பஸ்சில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக திருவனந்தபுரம் போதைப்பொருள் தடுப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த பஸ்சில் பயணம் செய்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை நடத்தினர். இதில் அந்த நபரின் வயிற்றுக்குள் 4 கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை வெளியே எடுத்து பரிசோதித்தபோது அதில் 107 கிராம் எம்டிஎம்ஏ இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவனந்தபுரம் தம்பானூர் ராஜாஜி நகரை சேர்ந்த பிஜூ (53) என்பது தெரியவந்தது. இவர் பெங்களூருவில் இருந்து எம்டிஎம்ஏவை வாங்கி நாகர்கோவில் வழியாக பஸ்சில் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணைக்கு பின் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: