திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மகனை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் அகிரா நந்தன் போன்று செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, டீப் பேக் வீடியோ(ஆபாச) உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோக்களால், தனது தனிப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அகிரா நந்தன் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காக்கிநாடா மாவட்ட சர்பவரம் போலீசார், அகிரா நந்தன் டீப் பேக் வீடியோ தயார் செய்து வெளியிட்டதாக ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அனுமதியின்றி அகிராவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி இந்த போலி வீடியோ உருவாக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், பிரபலங்கள் மற்றும் பொது பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் போலி வீடியோக்களை உருவாக்குவது கடுமையான குற்றம் என்றும், அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சமூக வலைதளத்தில் பரவும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தை பகிர வேண்டாம். அவ்வாறு சமூக வளைதலத்தில் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் ஆபாசமாக பகிரப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
