திருப்பூர், ஜன.26: நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம், கோவில் வழி பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளைக் கொண்ட நேற்று பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்து நிலையங்களில் உள்ள வணிக வளாகங்கள், பயணிகளின் உடைமைகள் பாதுகாப்பு அறை மற்றும் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதே போல் ரயில் நிலையத்திலும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் மற்றும் பார்சல் மையங்களில் புக்கிங் செய்யப்பட்ட பார்சல் பண்டல்கள், வாகன நிறுத்திமிடங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள், பயணிகளை விட்டுசெல்லும் கால் டாக்சி ஆட்டோ உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். மாநகர மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபடக்கூடிய வகையில் சுமார் 2000 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
