காங்கயம், ஜன. 21: காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளை நகராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர்.காங்கயம் பேருந்து நிலையம் அருகே, நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 2 கடைகளை நடத்துவோர் கடந்த 10 மாதத்திற்கும் மேலாக வாடகை செலுத்தப்படாமல் கடை நடத்தி வந்துள்ளனர். பஸ்நிலையம் பகுதியில் இரண்டு கடைகளும் வடகை செலுத்தவில்லை. இவைகளின் நிலுவைத் தொகை சுமார் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். மேற்கண்ட கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வாடகை செலுத்த வலியுறுத்தி சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும், நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்றும் அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வருவாய் ஆய்வாளர் ஜெ.வருண் மற்றும் பணியாளர்கள் வாடகை செலுத்தாத மேற்கண்ட 4 கடைகளைப் பூட்டி சீல் வைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில்,“நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீர் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை உள்ளிட்ட உடனடியாக செலுத்தி, நகராட்சிக்கு ஒத்துழைக்கவும், இனி வரும் காலங்களில் வாடகை செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
