திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயலில் இன்று ரதசப்தமியையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இன்று காலை முதல் இரவு வரை மலையப்பசுவாமி பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் 7 வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதனை ‘மினி பிரமோற்சவம்’ என அழைக்கப்படுகிறது.
அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகன சேவையாக வாகன மண்டபத்தில் இருந்து 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி சிவப்பு பட்டு வஸ்திரம் உடுத்தி, தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து, சிவப்பு நிற பூமாலை சூடி மாடவீதியில் எழுந்தருளினார். மாட வீதியில் வடமேற்கு பகுதியில் சூரிய உதயத்திற்காக மலையப்ப சுவாமி சிறிது நேரம் காத்திருந்தார். காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து 7.15 மணியளவில் மலையப்ப சுவாமிக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை 9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.இதைதொடர்ந்து ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.
ெதாடர்ந்து மாலை 4 முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், 6 முதல் இரவு 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பசுவாமி அருள்பாலிக்க உள்ளார். ரதசப்தமியொட்டி கோயிலில் நித்யசேவைகள், நேர ஒதுக்கீடு டிக்கெட், விஐபி தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி வீதி உலா வருவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். 4 மாட வீதி மற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள பக்தர்களுக்கு தொடர்ந்து பால், காபி, மோர் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
