டெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் மறைந்த நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷன் விருதும், கலைப் பிரிவில் நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பல்வேறு துறைகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி இயக்குநர் வீழிநாதன் காமகோடிக்கு அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷன் விருது, சமூக சேவைக்காக எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு பத்ம பூஷன் விருது, கலைத்துறை பிரிவில் காயத்ரி பாலசுப்ரமணியம் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது, மருத்துவத்துறை பிரிவில் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் கே.ராமசாமி பத்ம ஸ்ரீ விருது, சிவில் சர்வீஸ் பிரிவில் கே விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது, கலைப் பிரிவில் ஸ்ரீ ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது, மருத்துவத்துறை பிரிவில் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது, கலைத்துறை பிரிவில் மறைந்த ஓவியர் ஆர் கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது, கலைத்துறை பிரிவில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் பத்மஸ்ரீ விருது, அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் வீழிநாதன் காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது, இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது, கலைப் பிரிவில் திருவாரூர் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன் விருது பட்டியல்;
நடிகர் தர்மேந்திர சிங் தியோல் (கலை) – மஹாராஷ்டிரா, கே.டி.தாமஸ் (பொது விவகாரங்கள்)- கேரளா, ராஜம் (கலை) – உத்தரபிரதேசம், நாராயணன் (இலக்கியம் மற்றும் கல்வி) – கேரளா, வி.எஸ்.அச்சுதானந்தன் (பொது விவகாரங்கள்) – கேரளா.
பத்ம பூஷன் விருதாளர்கள்;
அல்கா யாக்னிக் – (கலை) -மஹாராஷ்டிரா, பகத் சிங் கோஷ்யாரி- (பொது விவகாரங்கள்) உத்தரகண்ட், மம்முட்டி- (கலை) – கேரளா, டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு – (மருத்துவம்) அமெரிக்கா, பியூஷ் பாண்டே (மறைவு) – (கலை) – மஹாராஷ்டிரா, சதாவதானி ஆர் கணேஷ் – (கலை) – கர்நாடகா, ஷிபு சோரன் (மறைவு)- (பொது விவகாரங்கள்) – ஜார்கண்ட், உதய கோடக் (வர்த்தகம் மற்றும் தொழில்) மஹாராஷ்டிரா, வி.கே. மல்ஹோத்ரா (மறைவு) (பொது விவகாரங்கள்) – டெல்லி, வெள்ளப்பள்ளி நடேசன்(பொது விவகாரங்கள்) – கேரளா, விஜய் அமிர்தராஜ் – (விளையாட்டு) – அமெரிக்கா.
