கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு: உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்க விமர்சனம்

புதுடெல்லி: நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் தரன் என்பவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், இந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பாஜக அமைச்சர் ஒருவருக்கு எதிராக அவர் உத்தரவு பிறப்பித்ததே, இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காரணம் என்று சட்ட வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், புனேவில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘நீதித்துறையின் சுதந்திரத்திற்கு வெளியில் இருந்து வரும் ஆபத்தை விட, உள்ளிருந்தே வரும் ஆபத்துதான் மிகப்பெரியது’ என்று அதிருப்தி வெளியிட்டார். நீதிபதி தரனின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய அவர், ‘அரசுக்கு எதிராக அல்லது அரசுக்கு ஆதரவில்லாத உத்தரவை பிறப்பித்தார் என்பதற்காக ஒரு நீதிபதியை ஒரு உயர்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது ஏன்? கொலிஜியம் அமைப்பின் முடிவுகளில் நிர்வாகத் துறையின் தலையீடு இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும் நீதிபதி உஜ்ஜல் புயான் பேசுகையில், ‘நீதிபதியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இது முழுவதுமாக நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று கொலிஜியம் தனது முடிவை மாற்றிக் கொண்டது என்பது, அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பில் நிர்வாகத் துறையின் ஆதிக்கம் இருப்பதை காட்டுகிறது. இது அரசியல் தலையீட்டை அப்பட்டமாக ஒப்புக்கொள்வதாகும். ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப நீதிபதிகள் மாற்றப்பட்டால், கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்’ என்று அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நீதிபதிகள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும் செயல்படுவோம் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளோம். அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். நமது நம்பகத்தன்மையை இழந்தால் நீதித்துறையில் மிஞ்சுவது எதுவும் இருக்காது. ஒரு நீதிபதி அரசியல் மற்றும் கருத்தியல் சார்பு கொண்டவராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தீர்ப்பு வழங்கும் நடைமுறையில் அது பிரதிபலிக்கக்கூடாது. குறிப்பிட்ட நீதிபதியின் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வரும்போதே, தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே கணிக்கக்கூடிய நிலை உருவானால், அது நீதித்துறைக்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு சோகமான நாளாக அமையும்’ என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த விமர்சனங்கள், தற்போது ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: