பெருந்துறை, ஜன.24: பெருந்துறை அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களின் சுடுகாடு கடந்த பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று பெருந்துறை பஸ் நிலையம் அருகில் ஆனந்த நகர் ஆதிதிராவிடர் சுடுகாடு மீட்பு என்ற பெயரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த நகரை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சுடுகாடு குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
