சபரிமலை கோயில் தங்கம் திருட்டில் தந்திரிக்கு நேரடி தொடர்பு உண்டு: நீதிமன்றத்தில் எஸ்ஐடி தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்கம் திருட்டு மற்றும் திருட்டை நடத்தியவர்களுடன் தந்திரிக்கு நேரடி தொடர்பு உண்டு என்று கொல்லம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ள ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்குகளில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்திரியை கடந்த இரு தினங்களுக்கு முன் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கொல்லம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ள தந்திரியின் ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரம் வருமாறு: சபரிமலை தங்கம் திருட்டில் தந்திரி கண்டரர் ராஜீவரருக்கு தொடர்பு உண்டு. கோயிலில் இருந்து கதவு, நிலை மற்றும் துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் கடத்தப்பட்டதில் இவருக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுடன் தந்திரி நெருக்கமான உறவை வைத்திருந்தார்.

குறிப்பாக முதல் குற்றவாளியான உண்ணிகிருஷ்ணன் போத்தி, நகை வியாபாரி கோவர்தன் மற்றும் சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இவருக்கு அதிக நெருக்கம் உண்டு. உண்ணிகிருஷ்ணன் போத்திக்கும், தந்திரிக்கும் இடையே பண பரிவர்த்தனையும் நடந்துள்ளது. தங்கம் திருட்டு தொடர்பாக நடைபெற்ற அனைத்து சதித்திட்டங்களிலும் தந்திரிக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த ரிமாண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவுக்கு ஜாமீன்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் முன்னாள் நிர்வாக அதிகாரியான முராரி பாபு கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று போலி ஆவணம் தயாரித்துத்தான் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இந்த போலி ஆவணத்தில் முராரி பாபுவும் கையெழுத்து போட்டிருந்தார். பலமுறை ஜாமீன் மனு அளித்தும் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி முராரி பாபு கொல்லம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முராரி பாபுவுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவருக்குத் தான் முதன்முதலாக ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: