புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்த வழக்கானது தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் ஆறு எம்பி பதவி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலும் தற்போது நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் புகழேந்தி தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில்,‘‘ அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம், கட்சி கொடி பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரத்தில் ஆணையம் விரிவான ஆய்வு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவைகள் பரிசீலனையில் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளையும் கூட்டாகவும், முழுமையாகவும் ஆராயப்படுகிறது.
எனவே இதுதொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், நீதிபதி விடுமுறையால் வரும் பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் அதிமுக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
