புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், அண்மையில் அரியானாவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலைக்கு சென்று அங்குள்ள தையல்காரர்களுடன் உரையாடிய காணொலியை பதிவிட்டுள்ளார். அத்துடன், “அமெரிக்காவின் 50 சதவீத வரி மற்றும் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை இழப்புகள், தொழிற்சாலை மூடல்கள், குறைவான ஆர்டர்கள் தான் தற்போதுள்ள இறந்த பொருளாதாரத்தின் உண்மை நிலை. தற்போது 4.5 கோடிக்கும் அதிகமான வேலைகள், லட்சக்கணக்கான தொழில்கள் இருந்தாலும், மோடி அதற்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மோடி இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஜவுளித்தொழில் இந்திய பொருளாதாரத்தின் இரண்டாவது முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவின் வரி விதிப்புடன், ஐரோப்பாவில் விலை வீழ்ச்சி, வங்கதேசம் மற்றும் சீனாவின் கடுமையான போட்டிகள் காரணமாக ஆலைகள் மூடப்படுகின்றன. கொள்முதல் குறைந்து, ஜவுளித்தொழில் முழுவதும் பெரும் கொந்தளிப்புடன் உள்ளது. பிரதமர் மோடி தனது சொந்த பலவீனத்தால் இந்திய பொருளாதாரம் மேலும் பாதிக்க அனுமதிக்க கூடாது. எனவே, பிரதமர் மோடி கவனம் செலுத்துங்கள் அவர்களே” என தெரிவித்துள்ளார்.
* ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்திய ஜவுளித்துறை பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தன் எக்ஸ் பதிவில், “ஜவுளித்துறை முடங்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.
ஜவுளி மற்றும் ஆடைத்தொழில்கள் மூடப்படவில்லை. 2024ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் இடையே, ஜவுளி ஏற்றுமதி ரூ.95,000 கோடியாக இருந்தது. இது 2025 ஏப்ரல் டிசம்பர் இடையே மேலும் ரூ.1.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
