கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* வறுவல் செய்யும் போது கிழங்கை நறுக்கி, உப்பு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு விட்டு எடுத்து பொரித்தால், சுவையாக இருக்கும்.

* மீன் பொரிக்க மசாலா கலந்து ஊறவைக்கும் போது கொஞ்சம் புளித்த தயிர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி பிசிறி வைத்து விட்டுப் பொரித்தால் மீன் கூடுதல் சுவையாக இருக்கும்.

* பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும் போது கடுகு, கறிவேப்பிலை, சிறிது மிளகுப்பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

– கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.

* உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது வெடிக்காமலிருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேகவைக்கலாம்.

*சட்னி வகைகள் மீந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர், நறுக்கிய வெங்காயம் (அ) காராபூந்தி சேர்த்து கலந்தால் சுவையான ரைத்தா தயார்.

*ஆம்லெட் செய்யும் போது ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால் பெரியதாகவும், உப்பியும் வரும்.

* கொத்தமல்லி சட்னி அரைக்கும்போது புளிக்கு பதிலாக எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்தால் சட்னி கறுக்காது. பசுமையாகவே இருக்கும்.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

*பிரெட்டை துண்டுகளாக்கி டோஸ்ட் செய்து, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, தயிரில் சிறிது உப்பு சேர்த்து, பிரெட் துண்டுகளின் மீது பரவலாக ஊற்றினால் பிரெட் தயிர் வடை தயார்.

* இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து, காய்ந்த எண்ணெயில் தக்காளியை வதக்கி, அரைத்த விழுதையும் போட்டு உடன் காலிஃப்ளவர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான தொக்கு தயார்.

* ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதில் பனீர் துண்டுகள், ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

* முந்திரி, பாதாம், கசகசா இவற்றை நீரில் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு அரைத்தால் எளிதில் சீக்கிரமும் அரைபடும்.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

* இன்ஸ்ட்ண்ட் காபி தூளை கொதிக்கும் நீரில் கரைத்து பாலில் கலந்தால், புதிய டிகாக்‌ஷன் போல் காபி மணக்கும்.

* பொரித்த குளோப் ஜாமூன்களை பொடி செய்த சர்க்கரையில் புரட்டி எடுத்தால், சர்க்கரை மிதமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.

* சாதம் குழைந்து விட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கரண்டி காம்பால் கிளற பொல பொல என்றாகும்.

– எஸ்.வெண்மதி, சென்னை.

* சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்விட்டு பின் சர்க்கரை, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

* இரண்டாவது முறை அரிசி அலம்பின தண்ணீரில் பருப்பு வேகவைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

– ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி.

* ரவா தோசை செய்யும் போது, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறு என்றிருக்கும்.

* இட்லி ெபாடி செய்யும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

* சாம்பார் செய்யும் போது, அதோடு ஒரு நெல்லிக்காயை துண்டாக்கி சேர்த்தால் சுவையும், மணமும் அலாதியாக இருக்கும்.

* சாம்பார் தண்ணியாகி விட்டால், பொட்டுக்கடலையை தூளாக்கி சேர்த்தால் கெட்டியாகும்.

– எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.

Related Stories: