அமைப்புசாரா தொழிலாளர்களின் கதாநாயகி

நன்றி குங்குமம் தோழி

தேசத்தின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்று உங்களுக்கு கிடைத்து விட்டது. இனி வாழ்க்கையில் எந்தக் கவலையும் இல்லை. நீங்கள் பெரிய விஞ்ஞானியாகப் போகிறீர்கள் என அனைவரும் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில், அந்த ஆய்வகத்தின் கதவை சாத்திவிட்டு புழுதி பறக்கும் வீதிகளில், எந்தவொரு அடிப்படை உரிமையும் இல்லாத தினக்கூலி தொழிலாளர்களுக்காக கோஷம் எழுப்ப நம்மால் முடியுமா?!

இப்படியாக ஒரு தனி நபர் எடுத்த உறுதியான முடிவு, ஒரு ஒட்டுமொத்த தேசத்தின் தொழிலாளர் சட்டங்களையும் மாற்றியமைக்க முடிந்தது என்பதற்கு கீதா ராமகிருஷ்ணனின் வாழ்க்கை சிறந்த உதாரணம்.டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்டி படித்து வந்த மாணவி எப்படி சமூகப் போராளியாய் மாறினார் என்கிற கேள்விகளோடும்… அமைப்புசாரா தொழிலாளர்கள் போராட்டம் குறித்தும் விரிவாக அவரிடம் பேசியதில்…

‘‘இயற்பியல் மீது அதீத காதல் கொண்ட எனக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மீதும், சமூகவியல் ரீதியாக கார்ல் மார்க்ஸ் மீதும் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது’’ என்றவரின் வாழ்வை ஒரு நிமிடம் நாம் யோசித்தால், ஐன்ஸ்டீனையும், மார்க்ஸையும் ஒரே தராசில் வைத்து பார்த்த ஒரு மூளை, பிரபஞ்சத்தின் விதிகளை தேடும் அதே மூளை, மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால், இந்த இரண்டு முரண்பாடுகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தது என்பதே இதன் தொடர்ச்சி.

‘‘அது 1974ம் வருடம். நான் ஒரு நேஷனல் சயின்ஸ் ஸ்காலர் என்பதால், பி.எச்.டி., மாணவியாக டெல்லி பல்கலைக்கழகத்தில் வலம் வருகிறேன். அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் மிகப்பெரிய ரயில்வே வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. 17 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்ட 20 நாள் போராட்டத்தில் நாடே ஸ்தம்பித்தது. ஏதோ சரி இல்லை என்ற எண்ணம் என் மனசில் ஆழமாய் பதியத் தொடங்கியது.

அப்போது ஜெயபிரகாஷ் நாராயணனின் சம்பூர்ண கிராந்தி இயக்கம், ‘பல்கலைக்கழகங்களை விட்டு மாணவர்கள் வெளியே வாருங்கள். மாணவர்கள்தான் சமூக மாற்றத்தின் விதைகள்’ என்று விடுத்த அழைப்பு, என்னைப் போன்ற மாணவர்களை வெகுவாய் பாதித்தது. அதுவரை, பெண்கள் விடுதியில் நடந்த சில அடிப்படை பிரச்னைகள், சாப்பாட்டு பிரச்னை, விடுதி கட்டுப்பாடுகளுக்கு எதிராய் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது என்றிருந்த நான், படிப்பை பாதியில் நிறுத்தி சென்னை திரும்பினேன்.என் அம்மா கமலா ராமகிருஷ்ணன் ஒரு டாக்டர். படிப்பை பாதியில் நான் நிறுத்தியதில் அதிர்ச்சி அடைந்தார். அப்பா ராமகிருஷ்ணன் ஆசிரியர். சுதந்திரப் போராட்ட வீரரும். அதனால அவர் பெருசா இதற்கு அலட்டிக்கல. என் சகோதரர்களும் மிகப்பெரிய ஆதரவை எனக்கு தந்தார்கள்.

சென்னை திரும்பியதும், உழைக்கும் மக்கள் மாமன்றத்தை சேர்ந்த குசேலர் அப்புறம் சுதந்திரப் போராட்ட வீரர் கிருஷ்ணமூர்த்தி இவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களோடு இணைந்து பகுதி நேர வேலை செய்ய ஆரம்பித்து, அப்படியே சென்னை பெண்கள் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். 1979ல் வேலையை விட்டுட்டு குடிசை பகுதி மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, பெண்கள் போராட்டத்தில் முன் நிற்பதை உணர ஆரம்பித்தேன். இது பெண்களோடு இணைந்து வேலை செய்ய என்னை மேலும் தூண்டியது.

இந்த நிலையில், இந்தியன் கவுன்சில் ஃபார் சோசியல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்(ICSR) ஆய்வு பணி ஒன்றை மேற்கொண்டார்கள். இது அரசு நிதி உதவியுடன் சமூகப் பிரச்னைகளை ஆய்வு செய்கிற முக்கியமான அமைப்பு. அவர்கள்தான் பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்யச் சொல்லி என்னை கேட்டிருந்தார்கள்.இந்த ஆய்வுக்காக பெண் தொழிலாளர்களோடு பழகும்போதுதான், எனக்கான வழி இதுவென முழுசாய் உணர ஆரம்பித்தேன். ஆய்வாளராய் சென்ற நான் செயல் பாட்டாளரா மாறிய தருணம் இதுவே.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடும் சிமென்ட் தட்டுப்பாடு போராட்டத்திற்கு வித்தாக அமைந்தது. சிமென்ட் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதாலும், கலப்படம் செய்யப்பட்டதாலும் கட்டுமானத் தொழில் முடங்கியது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் நிலைமை மோசம் அடைந்தது. அவர்களுக்கு எந்தவிதமான பணி பாதுகாப்பும் இல்லை. நலத்திட்டங்களும் இல்லை. சின்னதாய் அடிபட்டாலும் உதவி கிடைக்காது. ஆரம்பத்தில் சென்னையில் அவர்கள் நடத்திய போராட்டங்களை அன்றைய அரசு கண்டுகொள்ளவில்லை.

வெறும் கோஷம் போட்டா பத்தாது. அதிகார மையங்களை குறி வைக்கணும்னு மத்த ஆர்வலர்களோடு சேர்ந்து தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் (Joint Action Committee) என்ற அமைப்பை உருவாக்கினோம். உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையருடன் இணைந்து ஒரு சட்ட வரைவு ஒன்றையும் தயாரித்தோம். இந்த சட்ட வடிவங்களும், யுக்திகளும்தான் தேசிய அளவில ஒரு பாலிசிக்கு அடித்தளமா அமைந்தது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் நாடாளுமன்றத்தில் இதனை தனி நபர் மசோதாவாக அறிமுகப்படுத்தினார். இது ஒரு வரலாற்று சம்பவம். அரசாங்கத்தில் இல்லாத ஒரு உறுப்பினர் தன் சொந்த விருப்பத்தின் பெயரில் ஒரு சட்ட வரைவை கொண்டு வருவது அரிதான விஷயம். ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் குரல் நாட்டின் மிக உயர்ந்த மன்றத்தில் ஒளித்த தருணம் இதுவே.

1981ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வீடு முற்றுகை. ராஜ்பவன் முற்றுகை. கலெக்டர் ஆபீஸ் முற்றுகைன்னு, போராட்டத்தோட வடிவத்தையே மாற்றி போராட்டங்கள் தீவிரமாக்க, பலமுறை கைது செய்யப்பட்டு சிறைவரை சென்று, பல நாட்கள் சிறைவாசமும் அனுபவித்தேன். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ‘கில்டு’ அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த இயக்கம் மேலும் வலுவடைந்தது. ஒரு மாவட்டப் பிரச்னையாக இருந்ததை மாநிலம் தழுவிய போராட்டமாகவும் இது மாற்றியது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பாய் திரண்ட பிறகே அவர்களின் குரல் சத்தமாய் வெளியில் கேட்கத் தொடங்கியது. விளைவு தமிழ்நாடு அரசு இறங்கி வந்து, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கான சட்டத்தை உருவாக்கியது. இது முதல் வெற்றி. 1981ல் சட்டம் வந்தாலும் நலவாரியம் உருவானது 1995ல்தான். கிட்டத்தட்ட 14 வருஷம். ஆனால், சட்டம் வந்தும் பலன் கிடைக்கல. இறந்தா 10,000 ரூபான்னு சின்ன அறிவிப்பு மட்டுமே வந்தது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு அமைப்பு வேணும். விதிகள் வேணும். நிதி ஒதுக்கீடு வேணும். அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் இதைச் செய்யல. அரசியல் இழுபறியாகவே இது இருக்க, தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டே இருந்தோம்.1992ல் ஜெயலலிதா ஆட்சியில் சாலை மறியல், வேலை நிறுத்தம்னு தீவிரமாய் நாங்கள் போராட, தொடர் அழுத்தம் காரணமாய் அரசாங்கம் இறங்கி வந்து, நலவாரியம் அமைக்கிற வேலைகளைத் தொடங்கியது. பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகே 1995ல் நலவாரியம் அமைக்கப்பட்டது.

கட்டுமான மதிப்பில் ஒரு சதவிகித தொகையை செஸ் (cess) வரியாக வசூலித்து நலவாரியங்கள் அமைக்கப்பட்டன. செஸ் வரி மூலம் வாரியத்துக்கு வருகிற பணத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், பிள்ளைகளுக்கு கல்வி உதவி, கல்யாணம், மகப்பேறு உதவி, விபத்து நடந்தா நிவாரணம்னு சட்டப்பூர்வமான உதவிகள் கிடைத்தது. அதுவரை கருணை அடிப்படையில் கிடைத்த உதவிகள் உரிமை சார்ந்ததாக மாறின.

தமிழ்நாட்டில உருவாக்கப்பட்ட இந்த நலவாரிய அமைப்பு ஒரு வெற்றிகரமான மாடலாக மாற, 1996ல் தேசிய அளவிலான கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டம் வர முக்கிய காரணமாய் அமைந்ததுடன், வீட்டு வேலை செய்யுறவுங்க, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முடி திருத்துவோர், சலவை தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், செங்கல் சூளை தொழிலாளர்கள்னு அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகவும் இது விரிவடைந்தது. சட்டம் இயற்றப்பட்டதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. அதை செயல்படுத்துவதில் உள்ள ஓட்டைகளை எடுத்தும் போராட்டம் தொடர்ந்தது.

தற்போதைய ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுப்பு சட்டங்கள் மூலம் நாமெல்லாம் போராடி பெற்ற சட்டங்களில் 44 சட்டங்களை ரத்து செய்துள்ளனர். தமிழ்நாட்டில்தான் தொழிலாளர்களுக்காக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த 30க்கும் மேலான நலவாரியங்கள் இருக்கிறது. இவற்றின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் உள்ளனர்.முக்கியமாக இதில் நாம் போராடி பெற்ற கட்டட தொழிலாளர் சட்டமும் அடங்கும். கட்டட தொழிலாளர் சட்டத்தின் மூலம்தான் எல்லா மாநிலத்திலும் தொழிலாளர் நல வாரியங்களை அமைக்க முடிந்தது. போராட்டங்கள் இன்றும் தொடர்கிறது.

அன்று என் 22 வயதில் எடுத்த அந்த முடிவுதான் இன்று 73 வயது வரை என்னை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்காக இயங்க வச்சுக்கிட்டே இருக்கு. சுரண்டலோட வடிவங்கள் மாறும்போது போராட்டத்தோட வடிவங்களும் மாறும். இன்று ஸ்விகி, உபர், சொமட்டோ மாதிரி செயலிகள் மூலம் வேலை செய்கிற கிக் (Gig) வொர்க்கர்ஸும் கண்ணுக்குத் தெரியாத தொழிலாளர்கள்தான் என்கிற கீதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இன்றும் வீதியில் நின்று அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories: