காளான்களை அமுதமாக கொண்டாடும் சீனர்கள்!

நன்றி குங்குமம் தோழி

உணவுத் துறையில் காளான் மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கொழுப்பில்லாத உணவாக பார்க்கப்படும் காளான்கள் சைவப்பிரியர்களின் ஃபேவரைட்டான உணவுகளில் ஒன்று. இந்தியாவில் 19ம் நூற்றாண்டில்தான் காளான் உணவாக அறிமுகமானது என்றாலும் சீனர்கள் காளான்களை அமுதமாக அந்தக் காலக்கட்டத்திலேயே கொண்டாடி உள்ளனர். ரோமானியர்களோ ‘கடவுளின் உணவு’ என்கின்றனர்.

இயற்கையில் 2000 வகை காளான்கள் முளைத்தாலும் 25 வகைகளே உணவுக்கும் மருத்துவத்திற்கும் உகந்தவை. உலகில் அதிகமாக பயிரிடப்படும் ‘அகாரிகஸ் பிஸ்போரஸ்’ என்ற பட்டன் காளான்களுக்கே வரவேற்பு அதிகம். அடுத்து சிப்பிக் காளான்கள். ‘‘பட்டன் காளான் புற்று நோய்க்கு சிறந்தது என்றால் அது வராமல் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை தருவது சிப்பிக் காளான்’’ என்கிறார் ‘வில்வம் குரோ ஷாப்பி’ நிறுவனர் சிந்துஜா. தேனி மாவட்டத்திலேயே முதன் முதலாக காளான் வளர்ப்புத் தொடங்கி இன்று காளான்களில் பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரித்து அசர வைக்கிறார் இந்த சாதனை பெண்மணி.

‘‘தேனி மாவட்டம் கம்பம்தான் என்னோட சொந்த ஊர். கம்ப்யூட்டர்ல டிப்ளமோ படிச்சேன். ஆரம்பத்துல டெய்லரிங்தான் என்னோட வேலையாக இருந்தது. முதுகு வலி ஏற்பட்டதால், டாக்டர் தையல் மெஷினில் அமரக்கூடாதுன்னு சொல்லிட்டார். நான் செய்ற வேலை வித்தியாசமாக அதே சமயம் எனக்கு ஒரு அடையாளத்தை தரணும்னு நினைச்சேன். அப்படித்தான் காளான் வளர்ப்பை செலக்ட் பண்ணேன். அதற்கான பயிற்சியினை தனியார் மையத்தில் எடுத்தேன். அது திருப்திகரமாக இல்லை. அதன் பிறகு பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹார்ட்டிகல்ச்சர் ஆராய்ச்சி மையத்தில் பத்து நாட்கள் காளான் வளர்ப்பு முறை மற்றும் காளான் விதைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். இப்போது சிப்பிக் காளான் பண்ணை வைத்துள்ளேன்’’ என்றவர் சிப்பிக் காளான் வளர்ப்பு முறைகள் பற்றி விவரித்தார்.

‘‘தெரிந்தவர்களின் இடத்தில் வாடகைக்குதான் 2014 முதல் சிப்பிக் காளான் பண்ணை வைத்திருக்கிறேன். பண்ணையில் தென்னை ஓலையில் குடில் அமைத்தேன். அதன் பிறகு காளான் வளர்க்க ெபட் அமைக்க வேண்டும். அதற்கு தரமான நெல் மற்றும் கோதுமை வைக்கோல் தேர்வு செய்ய வேண்டும். இதில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று பாய்லர் முறை. மற்றொன்று கெமிக்கல் முறை. அதிக ஆர்டர்கள் வந்தால் மட்டுமே கெமிக்கல் முறையை கையாளுவோம். கெமிக்கல் என்றாலும் தீங்கற்றது.

வைக்கோலை முதலில் நன்கு பாயில் செய்து, 10 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வெளியில் காய வைக்க வேண்டும். 20% ஈரப்பதம் இருக்கும் போது 12 x 24 அளவில் உள்ள பாலிதீன் பைகளில் சீலிங் பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டு விட்டு, வைக்கோலில் விதை தூவி மறுபடியும் வைக்கோல் போட்டு மீண்டும் அதில் விதைகளை தூவி என்று பை முழுக்க இதே போல் செய்து முடிச்சு போட்டு தொங்கவிட வேண்டும்.

அதன் பிறகு பாலிதீன் பைகளில் ஒன்பது துளைகள் இடுவோம். சூரிய வெளிச்சம்குறைவான கூடாரமே போதுமானது. தினமும் தண்ணீரை மூன்று முறை பனித்துகள் போல் தெளிக்க வேண்டும். 21ம் நாள் மொட்டு வைக்கும். அப்பதான் பட்ஸ் வெளியே வரும். 25ம் நாள் அறுவடை செய்திடலாம். மொட்டு வந்த ஐந்தாவது நாளில் அறுவடை செய்திட வேண்டும். இல்லையென்றால் இதழ்கள் சுருங்க ஆரம்பித்துவிடும். பனி காலங்களில் புழு வைக்கும். அதை கட்டுப்படுத்த தண்ணீரில் மருந்தினை கலந்து தெளிக்க வேண்டும்.

காளான்களில் சாப்பிடக்கூடியது பால் காளான், சிப்பிக் காளான், பட்டன் காளான். அதில் நாங்க சிப்பிக் காளான் தான் பயிர் செய்கிறோம். மற்ற வகைகள் எங்களின் இடத்தின் காலநிலைக்கு விளையாது. நீர் சத்து, நார்ச்சத்து, புரதச் சத்து ஆகிய மூன்றும் இருப்பது இதில் மட்டும்தான். சிப்பிக் காளான்களாக மட்டுமில்லாமல், அதனை மதிப்புக்கூட்டுப் பொருட்களாகவும் தயாரித்து விற்பனை செய்யலாம். மற்ற வகை காளான்களில் அவ்வாறு செய்ய முடியாது’’ என்கிறார் சிந்துஜா.

‘‘நான் காளான் வளர்க்க ஆரம்பித்த போது மக்களுக்கு அது குறித்து விழிப்புணர்வு இல்லை. அதனால் மார்க்கெட்டிங் செய்வது பிரச்னையாக இருந்தது. காளானை பலர் அசைவம் என்று நினைச்சிருந்தாங்க. யாரும் வாங்க முன்வரல. குறிப்பாக திருவிழாக் காலங்களில் விற்பனையே ஆகாது. சைவம்தான் தாராளமா சாப்பிடலாம். உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு நானே மார்க்கெட்டிங் செய்ய துவங்கினேன். அக்கம் பக்கத்துல இலவசமாகவே கொடுத்தேன். தெருவுக்குத் தெரு விற்பனை செய்தேன். அதன் பிறகுதான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காளான் பற்றி தெரிந்து கொண்டு வாங்க ஆரம்பிச்சாங்க. காய்கறி கடையிலும் விற்பனைக்கு கொடுக்க ஆரம்பித்தோம். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக பிசினஸை டெவலப் செய்தேன்’’ என்று இந்தத் தொழிலில் தான் சந்தித்த சவால்களை பற்றி பேசினார் சிந்துஜா.

‘‘விற்பனைக்கு போக மீதியிருக்கும் காளான்களை காய வைத்து பொடியாக தயாரித்தேன். ஆரம்பத்தில் அதனை நான் விற்பனை செய்யவில்லை. என்னுடைய வீட்டிற்காக பயன்படுத்தி வந்தேன். இந்தப் பொடி இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருந்தது. அதன் பிறகு காமாட்சிபுரத்தில் வல்லுநர் ஒருவரிடம் மூன்று நாட்கள் பயிற்சி எடுத்தேன். காளானில் 8 வகை மதிப்புக்கூட்டு உணவுகளின் தயாரிப்பு குறித்து அவர் சொல்லிக் கொடுத்தார். பின்பு நானாக முயற்சி செய்து 50 வெரைட்டீஸ் வரை தயாரித்து விற்பனை செய்கிறேன்.

அனைத்தும் முறையாக பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. தேனியில் ஊரக வளர்ச்சி மையத்தில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ‘டொமைன் ஸ்கில் டிரையினராக’ காளான் வளர்ப்பு பற்றியும் தனிப்பட்ட முறையில் பண்ணையிலும் மத்திய அரசின் சான்றிதழ்களுடன் பயிற்சிகளை தருகிறேன். இந்தப் பயிற்சியை 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எங்கள் தயாரிப்பிலேயே மஷ்ரூம் லட்டு தான் ரொம்ப ஃபேமஸ். அதில் கம்பு, பாசிப்பயறு, காளான் பவுடர், நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்து லட்டாக பிடிப்போம். அடுத்து காளான் நக்கெட்ஸ். பசங்களுக்கு கடைகளில் விற்கப்படும் பாக்கெட் சிப்ஸுகளை வாங்கித் தருவதற்கு பதில் இந்தக் காளான் நக்கெட்ஸ் ஆரோக்கியமானது. எல்லாமே எங்கள் சொந்த பேக்டரியில் தயாரிக்கிறேன்.

எங்களிடம் பயிற்சி முடித்த பலர் தற்போது இதனை பிசினஸாக செய்து வருகிறார்கள். பெண்கள் ஆறு போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஓரிடத்தில் முடங்கக் கூடாது’’ என்று பெண்களுக்கு ஆலோசனை அளித்தவர், 2024ல் அரசு சார்பில் சென்னை மெரினாவில் முதன் முதலாக மகளிர் குழு சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஒரே வாரத்தில் தன் தயாரிப்புகளில் 14,000 பாக்கெட்டுகள் விற்பனை செய்தது குறித்து பெருமையாக கூறுகிறார் காளான் ராணி சிந்துஜா.

Related Stories: