சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா உட்பட மாநிலத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களுக்கு மிதமான பனிப்பொழிவு முதல் கடும் பனிப்புயல் வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சம்பா, காங்க்ரா, கின்னௌர், குலு, லாஹுல்-ஸ்பிதி, மண்டி, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய பகுதிகளில் அடுத்த 6 மணிநேரத்திற்கு இடைவிடாத பனிப்பொழிவு இருக்கும் என்றும், சில இடங்களில் தீவிரமான பனிப்புயல் வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஊனா, பிலாஸ்பூர் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. காங்க்ரா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களிலும் மழை மற்றும் பனிப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உயரமான மலைப் பகுதிகளான கின்னௌர் மற்றும் லாஹுல்-ஸ்பிதி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நீடிக்கும் என்றும், அங்கு மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக மின்சாரம், குடிநீர் மற்றும் தகவல் தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகளில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், சாலைகளில் பனி படர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் வழுக்கி விபத்துகள் ஏற்படக்கூடும் என்றும், பனிப்பொழிவினால் பார்வைத்திறன் பெருமளவு குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
