ஈரோட்டில் குடியரசு தினத்தன்று

ஈரோடு, ஜன. 21: ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று (26ம் தேதி) 225 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1-4-2025 முதல் 31-12-2025 வரை) குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல் நடைபெற உள்ளது.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-2027ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதிக்கப்படுகிறது.2026-2027ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்திற்கு பணிகள் தேர்வு செய்தல் குறித்து விவாதித்தல், நலிவு நிலை குறைப்பு நிதி முன்னேற்ற விபரம் தெரிவிக்கப்படும்.

தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம், ஜல் ஜுவன் திட்டம், சிறுபாசன ஏரிகள் புதுபித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: