கலசப்பாக்கம், ஜன.21: கலசப்பாக்கம் அருகே பர்வதமலை அடிவாரத்தில் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரில் முறைகேடு நடப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென் கைலாயம் என அழைக்கப்படும் நந்தி வடிவமான பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம் தேன் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு பவுர்ணமி அமாவாசை பிரதோஷம் ஆகிய நாட்களில், பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்தநிலையில், பர்வத மலைக்கு பக்தர்கள் ஏறி செல்லும்போது, பிளாஸ்டிக் பாட்டில்கள், பால், தயிர் பாக்கெட்டுகள், கற்பூரம், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாக்கெட்களில் பார்சல் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி செல்வார்கள். அப்போது கீழே இறங்கி வரும்போது வழிநெடுங்கிலும் பொருட்களை வீசுவதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க கடந்த ஆண்டு மே மாதம், ‘‘பருவதமலை சூழல் மேம்பாட்டு குழு’’ வனத்துறை மூலம் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பர்வதமலை அடிவாரத்தில் மலையேறி செல்லும் பக்தர்களை பரிசோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில், ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10 வசூலிக்கப்பட்டது.
