தஞ்சாவூர், ஜன.21: திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவையாறு அடுத்த பெரும்புலியூர் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இடுகாடு புனவாசல் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தார் சாலையில் இருந்து இடுகாட்டிற்கு செல்லும் வழி ஒருபுறம் வாய்க்காலாகவும், மற்றொருபுறம் நெற்பயிர் வயல்வெளியாகவும் இருந்து வருகிறது. வயலில் நடவு பணி செய்தாலும், வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் அதில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் உடல்களுடன் தடுமாறி கீழே விழும் நிலையில், அது பொதுமக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும் போராட்டத்திற்கு இடையே இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று இடுகாட்டில் ஈம சடங்குகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அவல நிலையை பலமுறை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் என பலரிடமும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாமல் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் எங்கள் சிரமத்தினை குறைக்கும் வகையில் சாலை அமைத்து உதவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
