சென்னை: புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என்று இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு ‘கர்த்தவ்ய துவார்’ என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்றை மக்கள் நன்கு அறிவர். ஒன்றிய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இந்த நுழைவாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள இந்தி வார்த்தை வடிவத்தை அகற்ற வேண்டும். இதில் அலட்சியம் காட்டப்படுமானால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழின் மாண்பையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே இந்தி பெயரை உடனடியாக நீக்கி அதற்குப் பதிலாக தமிழில் பொருத்தமான பெயரை அறிவிக்க வேண்டும்.
மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ: தமிழில் பொருள் விளங்க பெயர் சூட்டாமல் அப்படியே இந்தி பெயரை நுழைவாயிலில் பொறித்து இருப்பது ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்தி திணிப்பையே காட்டுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியதாகும். திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயரைப் பொறிக்க தெற்கு ரயில்வே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன்: இது ரயில்வே அதிகாரிகளின் தவறு என தமிழிசை சவுந்தரராஜன் கூறுகிறார். இந்தி திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள். இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதற்றம் கூடுகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: காலம் காலமாக இந்தி திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் ரயில்வே அலுவலக நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு பெயர் சூட்டும் போது மாநில உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் திருச்சி கோட்ட ரயில்வே தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு கடமை வாயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
* தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு
பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘திருச்சி ரயில்வே நுழைவாயிலுக்கு “கர்த்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் மாநில மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், மொழிபெயர்ப்பு செய்து சரியான தமிழ் பெயர் சூட்டுவதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தவறுகளால் ஒன்றிய அரசு தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு இடமளிக்க கூடாது,’ என தெரிவித்துள்ளார்.
* திமுகவினர் முற்றுகை
இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதியுள்ளதைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் நேற்று, திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நுழைவாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டிப்பதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
