77 வயது மாரத்தான் வீராங்கனை!

நன்றி குங்குமம் தோழி

வயதான தோற்றம் அவரின் முகத்தில் தெரிகிறது என்றாலும் அவரின் செயல்களைப் பார்க்கும் போது அவரின் வயதிற்கு சம்பந்தமே இருக்காது. சிறிதும் களைப்பின்றி, முழு ஆற்றலுடன் தினமும் ஓட்டப் பயிற்சி செய்யும் 77 வயதான க்மோயின் வஹ்லாங், நூற்றுக்கும் அதிகமான மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். தனது எழுபது வயதுக்கு மேல்தான் இவர் ஓடவே துவங்கி, மாரத்தானில் பங்கு பெற்று, அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.

மேகாலயாவின் ஸ்ங்கிமாவ்லெய்ன் (shngimawlein) எனும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து உலக மாரத்தான் மேடைக்கு சென்ற அவரது பயணம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. க்மோயினுக்கு 12 குழந்தைகள் மற்றும் 55 பேரக்குழந்தைகள் உள்ளனர்.“எனக்கு உடலில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. பல மருத்துவங்கள் கை கொடுக்காத நிலையில், நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும்படி மருத்துவர் எனக்கு ஆலோசனை கூறினார். அப்போது எனக்கு எழுபது வயது கடந்திருந்தது. ஆரம்பத்தில் நடைப்பயிற்சி செய்ய தொடங்கினேன்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து ஓடத் தொடங்கினேன். இவ்வாறு தினமும் காலையில் 5 கிலோ மீட்டர் வரை ஓட்டப் பயிற்சி செய்வேன். என் உடல்நலனும் மேம்பட்டது. நான் ஓட்டப் பயிற்சி செய்வதை என் கிராம மக்கள் கவனித்து வந்தனர். இளம் வயதினர் என்னுடன் சேர்ந்து ஓட்டப் பயிற்சி செய்தனர். சற்று வயதானவர்கள் என்னை கண்டு உத்வேகமடைந்து நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி செய்தனர்” என்று க்மோயின் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் டாப் ரேங்க் மாரத்தான் வீரர்களில் ஒருவராக இருந்த பென்னிங்ஸ்டார் லிங்க்டோய் என்பவர் க்மோயின் பற்றி அறிந்ததும், க்மோயினின் அசாத்திய ஆற்றலை கண்டு அவருக்கு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார். “க்மோயின் எழுபது வயதை கடந்த நிலையில்தான் ஓடத் தொடங்கியுள்ளார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் முறையாக பயிற்சி செய்தால் நிச்சயம் அவரால் மாரத்தான் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பினேன்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்கிற எனது கனவை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களில் க்மோயின்தான் வயதில் மூத்தவர். இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பலவற்றில் வெற்றி பெற்று நிறைய பதக்கங்களை குவித்திருக்கிறார். நான் உள்பட பலருக்கும் க்மோயின் ரோல் மாடலாக திகழ்கிறார்” எனும் பயிற்சியாளர், தேசிய மற்றும் ஆசிய அளவிலான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க க்மோயினை ஊக்கப்படுத்தியுள்ளார்.

தொடக்கத்தில் 35 வயது பிரிவில் 21 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறார். நிறைய பயிற்சிகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அளவில் முன்னேறியுள்ளார். போட்டியில் பரிசுத் தொகையாக பெற்ற இருபதாயிரம் ரூபாய் பணத்தை வைத்து தன் குடும்பத்திற்காக வீடு கட்டியுள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்ற க்மோயின் டிராபி, பதக்கம் போன்றவற்றை வென்று குவித்துள்ளார்.

தனது கிராமத்திலேயே பல வேலைகளை செய்து கடினமாக உழைக்கும் க்மோயின், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நலம் சரியில்லாத தனது கணவரை கவனித்து வருகிறார். “நான் பலரின் வீடுகளிலும் வயல்களிலும் வேலை செய்துள்ளேன். கற்கள், மண் போன்றவற்றை சுமந்து செல்வேன். எவ்வளவு வேலை செய்தாலும் நான் சோர்வாக இருக்க விரும்பியதேயில்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்து கொண்டேயிருப்பேன். 60 வருடங்களாக என் கிராமத்தைத் தாண்டி நான் எங்கேயும் சென்றதில்லை.

இப்போது மாரத்தான் போட்டிகளுக்காக நிறைய புதிய இடங்களுக்கு பயணம் செய்கிறேன்” என்று நெகிழும் க்மோயின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பான் பசிபிக் மாஸ்டர்ஸ் கேம்ஸ் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார். க்மோயினின் குடும்பத்தினர், கிராம மக்கள், ஸ்பான்சர்ஸ் மற்றும் மாநில அரசும் அவருக்கு ஆதரவு அளிக்கவே, க்மோயின் மேலும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு விளையாட்டுப் போட்டிக்காக ஆஸ்திரேலியா செல்ல காத்திருந்த போது, எவ்வித காரணமுமின்றி அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. “நான் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதும், நான் சோர்ந்து போய்விட்டேன்.

பல நாட்களாக வெளியில் வராமல் வீட்டில் சுருண்டு படுத்தேன்” என்பவரை எதுக்கும் துவளாமல் மீண்டும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுமாறு சக வீரர்களும், கிராம மக்களும் அவரை ஊக்கப்படுத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை க்மோயினை கண்டு உத்வேகமடைந்து அவரின் வழிகாட்டுதல்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். கிராம மக்கள் பலரும் க்மோயின் உடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டு வர உதவுகிறது என்பதை குறிப்பிடுகின்றனர்.

ஒரு கிராமப்புறப் பெண்ணாக இருந்து, சர்வதேச விளையாட்டு மேடையில் இந்தியாவின் கொடியை உயர்த்திய க்மோயின் வஹ்லாங், வாழ்க்கையில் எதையும் எப்போது தொடங்கினாலும் அது தாமதமில்லை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். அவரது இந்த வாழ்க்கை கதை, உடல்நலம், ஒழுக்கம், முயற்சி ஆகியவை ஒன்றிணைந்தால் எந்த வயதிலும் சாதனை சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

தொகுப்பு: ஆர்.ஆர்

Related Stories: