2024 முதல் ஜல்ஜீவன் திட்ட நிதி விடுவிக்கப்படவில்லை ரூ.3,112 கோடியை உடனடியாக ஒன்றிய அரசு விடுக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2024 முதல் இந்த திட்டத்தின் கீழ் நிதி ஏதும் விடுவிக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஒன்றிய அரசின் பங்கான ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:  டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: ஒன்றிய நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு மாநிலங்களின் ஆலோசனைகளைக் கோரியுள்ளதற்கு நன்றி. நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவதுடன், இந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களின் கருத்துகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை ஒன்றிய அரசு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்தது. எனினும், ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், ஒன்றிய அரசு அளித்த ஒப்புதலின் பலன்கள் முழுமையாக மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவில்லை.

அமைச்சரவையின் ஒப்புதலுக்கு ஏற்ப ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் கணக்கியல் பதிவுகளை ஒன்றிய அரசு செய்திட வேண்டும். மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்காததற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள், ஏற்கனவே மற்ற மாநிலங்களில் ஒப்புதல்கள் வழங்கப்பட்ட இதர நகரங்களுடன் ஒப்பிடும் போது முரண்பாடாக அமைந்துள்ளது.

மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திட வேண்டும். 2024-25 மற்றும் 2025-26ம் ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த தனது பங்குத்தொகையான ரூ.3,548 கோடியை இன்று வரையில் விடுவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் செயல்பாட்டிற்கு இந்த நிதி இன்றியமையாதது என்பதுடன், இந்நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் 44 லட்சம் மாணவர்களின் கல்வியையும், 2.4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.

ஒன்றிய அரசு தனது பங்கை விடுவிக்காததால், மாநில அரசு முழு செலவையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்காமல் இந்நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வரும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

Related Stories: