நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வழக்கு; பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவை துணை தலைவர் நிராகரித்தது செல்லுமா?.. உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்

 

புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் சிக்கிய புகாரில் நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மான வழக்கில், நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன வெற்றிடம் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிபதி வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தரப்பில், ‘மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்தாண்டு, ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்ததால், அவையில் தலைமை இல்லாத வெற்றிடம் உருவானது; எனவே துணைத் தலைவர் தீர்மானத்தை நிராகரித்தது சட்டப்படி செல்லாது’ என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், ‘நாடு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்; இதில் அரசியல் சாசன வெற்றிடம் ஏற்படுவதற்குச் சாத்தியமே இல்லை’ என்று கருத்துத் தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் இல்லாத போது துணைத் தலைவர் அப்பணியைச் செய்வது போல, மாநிலங்களவைத் தலைவர் இல்லாத சூழலில் துணைத் தலைவரே முழு அதிகாரத்துடன் செயல்பட முடியும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி வர்மாவிடமிருந்து அனைத்து நீதித்துறைப் பணிகளும் பறிக்கப்பட்டு அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலேயே தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: